இன்று மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
வரும் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.
இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இன்று மாலை கூடும் அமைச்சரவை கூட்டத்தில், சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
குறிப்பாக, ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அதை நிரந்தர சட்டமாக மாற்றுவதற்கான மசோதா வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தவிர புதிய சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், அந்த மசோதாக்கள் குறித்து அமைச்சரவை கூடி ஆலோசிக்க உள்ளது. அதன்பின்னர் அந்த சட்ட மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்.
கடந்த மாதம் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், மீண்டும் இன்று அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அப்போது நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அறிக்கை மற்றும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு, வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.