நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் தாஜ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும் – உயர்நீதிமன்றம் அதிரடி
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் தாஜ்மஹாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ரயில்வே நடைபாதைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரயில்வே நடைபாதைக்காக இரண்டு நீர்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரயில்வே நடைபாதை கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு வர தயாராக இருப்பதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்த நிலையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் தாஜ்மஹாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். நெடுஞ்சாலை ஆணையம், ரயில்வே ஆகியவற்றின் வளர்ச்சி திட்டங்கள் அவசியமானது என்றாலும், அவை இயற்கை வளங்கள், நீர்வளங்களை பாதிக்கும் வகையில் இருக்க கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நிலம் எந்த வகையை சார்ந்தது. நடைபாதை கட்டுமானத்தை இடிக்க செலவாகும் தொகை உள்ளிட்டவை குறித்து, தமிழக அரசு மற்றும் தென்னக ரயில்வே 3 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.