பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகியின் சஸ்பெண்ட் ரத்து!
தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி பாஜக தலைவர் தினேஷ் ரோடியின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.
சஸ்பெண்ட் உத்தரவு ரத்து:
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடி, 6 மாத காலம் இடை நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இடை நீக்கத்தை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக இடையே மோதல்:
சமீப காலமாக அதிமுக – பாஜக இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஏனென்றால், பாஜகவில் இருந்து விலகியவரை அதிமுகவில் இணைத்ததற்கு, கண்டனங்களை தெரிவித்து, தொண்டர்கள் மத்தியில் போஸ்டர் வழியாகவும், ஆர்ப்பாட்டங்கள் வழியாகவும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
உருவப்படம் எரிப்பு:
இந்த சமயத்தில் கடந்த வாரங்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் எதிர்வினையாற்றினர். இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பாஜக நிர்வாகி இடை நீக்கம்:
இதையடுத்து, கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ்ரோடி அப்பொறுப்பில் இருந்து ஆறு மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுகிறார் என மாவட்ட தலைவர் வெங்கடேசன் அறிவித்திருந்தார்.
இடைநீக்கம் வாபஸ்:
இந்த நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் திரு வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து தினேஷ் ரோடியை ஆறு மாத காலம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவித்த அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்று மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி அறிவித்துள்ளார். நேற்று 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவே சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.