செந்தில் பாலாஜி வழக்கு.! அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!
செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுல்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த மாதம் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையானது சட்டப்படி நடைபெறவில்லை எனவும், அவரை விடுவிக்க வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவானது முதலில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.
அப்போது இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்தார். அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்றும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கதுறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அடுத்து தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற மூன்றாம் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே போல செந்தில் பாலாஜி தரப்பில் அமலாக்கத்துறை சட்டவிரோதமாக தன்னை கைது செய்துள்ளதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான நீதிபதி அமர்வு முன், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தவறான தகவல்கள் கூறியுள்ளது என்று கபில் சிபில் குறிப்பிட்டார். இந்நிலையில் இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்று செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததது.
அப்போது விசாரணையில், செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என்றும், அதிகாரமில்லதாபோது எப்படி நீதிமன்ற காவலில் வைக்க முடியும் என வாதிடப்பட்டது. அதே போல மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அந்த மனு விசாரணைக்கு உகந்ததா என வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, வழக்கை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்தது, காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி கோருவது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.