வன்கொடுமை விவகாரம் : வலுக்கும் போராட்டம்…”யார் அந்த சார்?” இபிஎஸ் கேள்வி!

அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமைவழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

edappadi palanisamy

சென்னை : அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக தலைமையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விவகாரம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தின் போது ஞானசேகரன் தன்னுடைய போனில் சார் என்று யாரோடு பேசிக்கொண்டு இருந்ததாக மாணவி தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சார் என்று யாரும் இல்லை மாணவியை மிரட்டுவதற்காக ஞானசேகரன் அப்படி கூறியதாக காவல்துறை தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இருப்பினும் யார் அந்த சார் என சமூக வலைத்தளங்களில் எழுந்த கேள்வி இன்னும் ஓய்ந்தபாடு இல்லை.

அதிமுக போராட்டம்

இந்நிலையில், மாணவிக்கு எதிராக நடந்த இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் பல இடங்களில்  கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்து வரும் அதிமுகவை சேர்ந்த பலரையும்  காவல்துறை கைதும் செய்து வருகிறார்கள்.

இபிஎஸ் கேள்வி?

அதனைக்கண்டித்தும், இந்த விவகாரத்தில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்?  சார் யார் என எடப்பாடி பழனிசாமி கேள்வியும் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள மு.க.ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்,அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்,

மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் மு,க.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் திமுகவை சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர். என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.

அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்?
#யார்_அந்த_SIR ?” எனவும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே, சார் என்று யாரும் இல்லை மனைவியை பயம் காட்ட ஞானசேகரன் இப்படி பொய் சொல்லியிருக்கிறார் என சென்னை ஆணையர் அருண் விளக்கம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்