அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை உப்பு சப்பில்லாதது – அமைச்சர் துரைமுருகன்
கனிம வளங்கள் கொள்ளை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயார் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை உப்பு சப்பில்லாதது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர், தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என கூறியுள்ளது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் பாவம் எதையாவது சொல்லிக்கிட்டு இருப்பாரு என்று நக்கலாக பதிலளித்தார். மேலும், தென் பென்னை ஆறு நீர் பகிர்வு குறித்து பேச செயலாளர் சென்றுள்ளார். அதனால் அந்த விவகாரம் குறித்து பின்னர் பேசலாம் என்று தெரிவித்தார்.
இதனிடையே, சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் கொரட்டகிரியில் இயற்கை வளம் கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.