குட்நியூஸ்…இந்த மாணவர்களுக்கு மறுவாய்ப்பு;ஜூன் 29 முதல் விண்ணப்பம் – அரசு தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த மே மாதம் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில்,இந்த பொதுத் தேர்வு முடிவுகளை தற்போது (ஜூன் 27-ஆம் தேதி) அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.அதன்படி,தேர்வர்கள் tnresults.nic.in & dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,தமிழகம்,புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அந்த வகையில்,8,43,675 பேர் தேர்வு எழுதிய நிலையில்,7,79,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், குறிப்பாக பொதுத்தேர்வு எழுதிய 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 10.13% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும்,தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.27% அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன எனவும்,அதே சமயம்,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,11 ஆம் வகுப்பு துணைத்தேர்வை எழுதும் மாணவர்கள் வரும் ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.அதன்படி,https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்திலோ அல்லது அரசு தேர்வுகள் சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வை எழுதாத மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள துணைத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.மேலும்,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் மறுகூட்டலுக்கு ஜூன் 30 முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
அதே சமயம்,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் வாயிலாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,10,12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 4 வரை விண்ணப்பிக்கலாம் எனவும்,12-ம் வகுப்புக்கு ஜூலை 25 – ஆகஸ்ட் 1 வரை துணைத்தேர்வு நடைபெறும் நிலையில்,10-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2 முதல் ஆக. 8 வரை துணைத்தேர்வு நடைபெறவுள்ளது.