எங்கு தொடங்கியதோ.. அங்கேயே முடிந்த ஆன்மீக பயணம்.! பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வுகள்…
ஆன்மீக குருவாகவும், பக்கதர்களால் அம்மா என அன்போடு அழைக்கப்பட்டவருமான பங்காரு அடிகளார் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஆன்மீக உலகில் மிகப்பெரும் பங்காற்றிய அடிகளார் மறைவு பலருக்கும் மீள இழப்பாக மாறியுள்ளது. அவரது உடல் மேல்மருவத்தூர் ஆன்மீக மன்றத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம் என பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஆண்களுக்கு சபரிமலை… பெண்களுக்கு மேல்மருவத்தூர்… பங்காரு அடிகளாரின் ஆன்மீக நகர்வுகள்.!
தற்போது அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் அறிவித்தபடி அரசு முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க அரசு முறை மரியாதை அளிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி இறுதி சடங்கில் பங்கேற்றார். உடன் ஆளுநர் ஆர். என்.ரவி பங்கேற்றார். பங்காரு அடிகளாரின் உடல் அவர் விருப்பப்படி, அவர் எங்கு ஆன்மீக பயணத்தை தொடங்கினாரோ அதே இடத்தில் அதாவது கோவில் கருவறை மற்றும் சுற்று மண்டபம் பகுதிக்கு இடையே உள்ள இடத்தில் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் செய்யபட உள்ளது.
பக்தர்கள் மத்தியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனின் மறுஉருவமாகவும், அம்மாவாகவும் வாழ்ந்து வந்த பங்காரு அடிகளார் உண்மையாகவே தெய்வமாகியுள்ளர். பக்தர்களின் அழுகுரலுக்கு நடுவே அடிகளாரின் இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன.