இன்று முதல்…இங்கே செல்பவர்களுக்கு இவை கட்டாயம்;மீறினால் ரூ.500 அபராதம் – வெளியான அதிரடி உத்தரவு!
சென்னை:இன்று முதல் (ஜன.10 ஆம் தேதி) புறநகர் மின் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.மேலும்,கொரோனா கட்டுப்பாடுகளின்படி,புறநகர் ரயில் சேவைகள் 50% இருக்கை வசதியுடன் இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அரசு ஏற்கனவே அறிவித்தது.
இந்நிலையில்,நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டும்,மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டும்,சென்னை புறநகர் மின் ரயில்களில் பயணிப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி,இன்று முதல் புறநகர் மின் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.மேலும்,
- பயணிகள் ரயில் நிலையத்திலும் ரயிலிலும் செல்லும்போதும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்,முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளைக் கழுவுதல் போன்ற அனைத்து கொரோனா தடுப்பு நடத்தைகளையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- மாறாக,ரயில் நிலையத்தில் அல்லது பயணம் செய்யும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
- எனவே,பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும் எனவும்,இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இன்று முதல் புறநகர் மின்ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும்,UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- புதிய கட்டுப்பாடுகளின்படி,சாதாரண பயணிகளைப் போலவே,சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களும் தடுப்பூசி சான்றிதழை (இரண்டாம் டோஸுக்குப் பிறகு வழங்கப்படும் இறுதி தடுப்பூசி சான்றிதழ்)எடுத்துச் செல்ல வேண்டும்.பின்னர்,சீசன் டிக்கெட்டுகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் அச்சிடப்படும்.
- இந்த புதிய கட்டுப்பாடுகள் 31-01-2022 அன்று வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் மற்றும் பயணத்தின் போது உங்களின் முறையான ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கு ரயில்வே ஊழியர்களுடன் பயணிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Dear #Chennai Suburban commuters!
Please take note of the new restrictions imposed for travel in Chennai suburban w.e.f 10th January 2022 (Monday)
Please follow #COVIDAppropriateBehaviour and travel safely! pic.twitter.com/78pFUPqRLf
— Southern Railway (@GMSRailway) January 8, 2022