பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய நிதி பாதுகாப்பை உறுதி செய்தாலும், அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தியது.
இதனால், 2004 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System – NPS) அறிமுகப்படுத்தப்பட்டு, பழைய திட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? என சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ., மரகதம் எழுப்பிய கேள்விக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அதை முதல்வர் கவனித்து வருகிறார் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ”பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும. இதற்காக குழு அமைக்கப்பட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், முதலமைச்சருடன் பேசி உரிய நேரத்தில் சரியான முடிவு அரசு எடுக்கப்படும். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து பல அரசு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்துடன் பரிசீலிக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.