கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்.!
- சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் முதல் 3 கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறையினரும், 4 மற்றும் 5 அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் நடத்தினர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 6-வது கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது 2 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளது.
மேலும் இதற்காக தமிழக அரசு முதல்கட்டமாக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பின்னர் படிப்படியாகவும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது, எனத் தெரிவித்தனர். இதனிடையே சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் ஆகியோர் கூறுகையில், கீழடியில் இப்போது தொடங்கும் அகழாய்வுப் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். மேலும் அங்கு நவீன அறிவியல் தொழில்நுட்பம் தொல்லியல் எச்சங்கள் புதைந்துள்ள இடங்கள் கண்டறியப்பட்டு துல்லியமாக இந்த அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.
இதனிடையே கீழடியில் 5 கட்டங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு சமீபத்தில் நடந்த பட்ஜெட்டில் ரூ.12.21 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. மேலும் இதற்காக கீழடி அரசுப் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 2 ஏக்கர் நிலம் தயார்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்குமுன் நடந்த அகழாய்வு பணியில் சுமார் 2600 ஆண்டுகள் பழமையான 2,000க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன என குறிப்பிடப்படுகிறது.