பெரியார் சிலை மீது காலணி வீச்சு …!தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் …! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
பெரியார் சிலை மீது காலணிகளை வைத்து அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சிறந்த சிந்தனையாளராகவும், சமூகப்புரட்சியின் வழிகாட்டியாகவும், புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராகவும் , பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராகவும் , மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகவும் செயல்பட்ட தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அந்தந்த பகுதியில் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் ஷூ வீசி அவமரியாதை செய்தனர்.
அதே போல திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தீவுத்திடலில் இருக்கும் பூங்காவில் உள்ள பெரியார் சிலை மீது சமூக விரோதிகள் காலணிகளை வைத்து அவமரியாதை செய்ததுடன் சேதப்படுத்தியுள்ளனர்.இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி , காங்கிரஸ் கட்சினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பெரியார் சிலையை அவமதித்து பொது அமைதியை குலைக்கத் திட்டமிட்டவர்களை கைது செய்து தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.