“மக்களின் உணர்வு தான் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கம்” – மத்திய அமைச்சர் எல்.முருகன்
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியில் வெற்றிக்கான முழக்கமாக தான் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டுள்ளனர் என மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 15ம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின.
இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியே நடுவே, பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பும் போது, சில ரசிகர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த சம்பவம் குறித்து திமுக உள்ளிட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், வெற்றிக்கான முழக்கமாக தான் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டுள்ளனர் என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இணையமைச்சர் எல்.முருகன், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியில் வெற்றிக்கான முழக்கமாக தான் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டுள்ளனர். மக்களின் உணர்வுகளாகத்தான் நான் இதை பார்க்கிறேன்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தை அரசியலாக்க பார்த்தார். அது எடுபடவில்லை என கூறினார். இதன்பின் பேசிய அவர், திமுகவின் அத்தனை தடைகளையும் மீறி லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது. படக்குழுவினருக்கு என வாழ்த்துக்கள். கடைசி ஒருவாரமாக தமிழ்நாடு முழுவதும் எல்லா மீடியாக்களும் லியோ பற்றித்தான் பேசினார்கள். திமுகவினர் லியோ படத்தை அந்த பாடுபடுத்திவிட்டனர் எனவும் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு சில நாட்களுக்கு முன்பு ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த எல் முருகன், இதற்கு நான் பதில் ஒரே வரியில் தான் கூற முடியும் என கூறிவிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் , ஜெய் ஸ்ரீ ராம் , ஜெய் ஸ்ரீ ராம் என தொடர்சியாக முழக்கமிட்டு கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.