எஸ்ஆர்எம் மருத்துவமனையில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கான இரண்டாம் கட்ட பரிசோதனை இன்று முதல் ஆரம்பம் .!
கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் தடுப்பூசிக்கான இரண்டாம் கட்ட பரிசோதனை இன்று முதல் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து, அதன் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் முதலில் விலங்குகளுக்கு அளித்து பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி அடைந்ததால், இதற்கு இந்திய மருந்து கட்டுபாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்தது. அதனை தொடர்ந்து ஐசிஎம்ஆர் கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவாக்ஸினை ஆகஸ்ட் 15 முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய நாடு முழுவதும் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர், ரோஹ்டாக் மற்றும் கோவா ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆராய்ச்சி மையத்தில், முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை கடந்த மாதம் 23-ம் தேதி செலுத்தப்பட்டு, அவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இரண்டாவது கட்ட பரிசோதனை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இன்று முதல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்ததால் இரண்டாம் கட்ட பரிசோதனையில் 2 பேருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி போடப்பட்டு தொடங்கப்பட்டது .