LIC நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

Default Image

ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் மாநில அரசுகளின் வருவாயில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை மத்திய அரசு கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை.

2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகள்  தொடங்கும் என பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், LIC நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், சிறு-குறு தொழிலுக்கு உதவி, விவசாயத்திற்கான குறைந்த பட்ச ஆதார விலைக்கு நிதி உள்ளிட்ட சில அறிவிப்புகள் மகிழ்ச்சி அளித்தாலும், எல்.ஐ.சி. பங்கு விற்பனை, நீர்பாசனத் திட்டங்களில் தனியார் மயம், தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றம் இல்லாதது உள்ளிட்ட அம்சங்கள் கவலையளிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், காவிரி-பெண்ணாறு திட்டம் இறுதி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பல ஆண்டுகளாக பேச்சளவிலேயே இருக்கும் முக்கியமான இந்த நதிநீர் இணைப்புத் திட்டம் இந்த ஆண்டிலாவது செயல்பாட்டளவில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும். சிறு-குறு தொழில்களுக்கு ரூ.2 லட்சம் கோடி கடனுதவி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை ஆகியவை ஆறுதல் அளிக்கின்றன.

வேளாண் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும் பாராட்டத்தக்கது. எனினும் உரமானியம், இடுபொருள் விலை உயர்வைக் கட்டுப்பாட்டில் வைப்பது பற்றிய தெளிவான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. 12-ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வியை ஊக்குவிப்பது என்ற அறிவிப்பை வேறெந்த மாற்று சிந்தனையும் இல்லாமல் செயல்படுத்திட வேண்டும்.

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையாக உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் மத்திய அரசு காட்டும் உறுதி கண்டனத்திற்குரியது. இதேபோல நீர்ப்பாசனத் திட்டம் உள்ளிட்டவற்றிலும் தனியாரின் பங்களிப்பைக் கொண்டுவரப்போவதாக அறிவித்திருப்பது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஒரே நாடு, ஒரே பதிவு (One Nation-One Registration) திட்டம் மாநில அரசுகளின் வருவாயில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு அதனைக் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்