பரபரக்கும் அரசியல் களம்! அதிமுக – பாஜக கூட்டணி? அண்ணாமலை பதவிக்கு ஆபத்து?
பாஜக தேசியத் தலைமை, அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய நபரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை பற்றிய பேச்சுகளும் அதிகமாக எழுந்துள்ளன. அதிமுக மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையனின் தனித்தனி டெல்லி பயணங்கள், அங்கு பாஜக மூத்த தலைவர்களுடனான சந்திப்புகள் அதன் பிறகான அரசியல் நகர்வுகள் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன.
இந்த சந்திப்புகள் குறித்து அதிமுக மற்றும் பாஜக என இரு தரப்பில் இருந்தும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை. பாஜக தேசிய தலைமை அதிமுகவில் பிரிந்து சென்ற தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு இபிஎஸ் மறுப்பு தெரிவித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தான், பாஜக தேசிய தலைமை அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கும், தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாத காரணத்தால் பாஜக தேசியத் தலைமை கூட்டணிக்காக மாநிலத் தலைமையை மாற்ற முடிவு செய்துள்ளாதாக கூறப்படுகிறது.
ஒருவேளை பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் மாற்றப்பட்டால் அண்ணாமலை வகித்த பதவிக்கு முதல் வரிசையில் இருப்பவர் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன். இவர் முன்னர் அதிமுகவில் இருந்த காரணத்தால் அதிமுக – பாஜக கூட்டணி இலகுவாக இருக்கும் என எதிர்பார்ப்படுகிறது. அடுத்த இடத்தில் தமிழிசை சவுந்தராஜன், வானதி சீனிவாசன், புதியதாக கட்சியில் இணைந்த சரத்குமார் பெயர் கூற இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
பாஜக மாநிலத் தலைமை மற்றம் குறித்த யூகங்களுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு தெரிந்துவிடும் என கூறப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல, இன்று தமிழக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து ஆலோசித்தனர் எனக் கூறப்படுகிறது.