“இந்த விசயத்தில் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல” – கமல்ஹாசன் குற்றச்சாட்டு..!

கிராம சபைகளைக் கண்டு அஞ்சுவதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதை நடத்தாமல் இருப்பதிலும் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வரும் அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில்,கடைசி மனிதரும் அரசியல் தெளிவு பெற்று தன் அதிகாரங்களை உணரும் வரை கட்சிப் பணி தொய்வில்லாமல் தொடர வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

காந்தியின் கனவு:

“கிராம சபைகளைப் பொருத்தவரை ‘கடைசி மனிதனுக்கும் அதிகாரம்’ எனும் காந்தியின் கனவே நம்முடைய கனவு. கிராம சபைகளின் முக்கியத்துவத்தை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் பணியை மக்கள் நீதி மய்யம் திறம்படச் செய்தது எனும் பெருமை நமக்கு உண்டு.

ஆண்ட,ஆளும் கட்சிகள் அச்சம்:

கிராம சபைகளைக் கண்டு அஞ்சுவதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதை நடத்தாமல் இருப்பதிலும் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. கொரோனா பெருந்தொற்று இவர்களுக்கு மிக வசதியான ஒரு காரணமாக அமைந்தது. தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, பதவியேற்பு என எதையுமே தடுக்காத கொரோனா, கிராம சபை நடத்தப்படவேண்டிய நாள் வந்ததும் தலைவிரித்தாடிவிடும்.

கடைசியாக நடந்த கூட்டம்:

2020-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடந்த கிராம சபைதான் கடைசியாக நடந்த கூட்டம். பல்வேறு தரப்பின் அழுத்தத்தினாலும், ‘கிராம சபை நடத்தும் என் உரிமையில் மாநில அரசு தலையிட முடியாது’ என ஒரு பஞ்சாயத்துத் தலைவர் தொடர்ந்த வழக்கின் அழுத்தத்தினாலும் தமிழக அரசு, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி அன்று கிராம சபை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 615 நாட்களுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் கிராம சபை இது.

கிராம சபைக் கூட்டங்களில் அவசியம்:

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில்தான் கிராம சபை நடைபெற இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்திற்கு இது முதல் உள்ளாட்சித் தேர்தல். நானும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டங்களில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கிராம சபைக் கூட்டங்கள் இதற்காக உதவட்டும்:

கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்போதே உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள். கிராமங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கைவளச் சுரண்டல், டாஸ்மாக், கைவிடப்படும் நீர்நிலைகள் குறித்து கவனம்கொள்ள கிராம சபைக் கூட்டங்கள் உதவட்டும்.

இதனை உறுதி செய்ய வேண்டும்:

இந்தச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிக வலுவானவை. கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பொதுவெளியில் வைக்கவும், கூட்டங்களை வீடியோ பதிவு செய்வதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும். பல கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொண்ட அனுபவம் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு உண்டு. அந்த அனுபவங்களைக் கொண்டு கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யுங்கள்.

கடைசி மனிதரும் அரசியல் தெளிவு பெற்று தன் அதிகாரங்களை உணரும் வரை நம் பணி தொய்வில்லாமல் தொடர வேண்டும்’,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்