அரசிற்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மீதி நடவடிக்கை எடுக்கப்படும்..!

Default Image

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் சேவையை கேபிள் ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252911 மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணமின்றி, இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களை பொதுமக்களுக்கு ரூ.140+GST என்ற குறைந்த மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. இது மற்ற நிறுவனங்களை விட மிக குறைந்த கட்டணம் ஆகும். குறைந்த கட்டணத்தில் அதிகமான சேனல்களை வழங்கி வருகின்றது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் சேவையை விரும்பும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள அரசு கேபிள்டிவி சேவையை வழங்கும் ஆபரேட்டரிடம் கேட்டு பெறலாம். அவ்வாறு பொது மக்களுக்கு அரசின் சேவையை கேபிள் ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252911 மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் பழுது அடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, அல்லது சந்தாதாரர் குடிபெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றாலோ, அல்லது தனியார் செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தினாலோ, இந்நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட் அடாப்டர் ஆகியவற்றை அந்த பகுதியில் உள்ள அரசு செட்டாப் பாக்ஸை வழங்கிய அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதால் அதனை அவர்கள் அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஒரு சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையை வழங்குவதற்காக இந்நிறுவனத்திடமிருந்து செட்டாப் பாக்ஸ்களை பெற்று கொண்டு, அதை பொது மக்களுக்கு வழங்காமல், தங்கள் சுய லாபத்திற்காக, தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கி அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்வதாக, புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு இவ்வாறு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை மூன்று மாதங்களுக்கு மேலாக செயலாக்கம் செய்யாமலும், அவ்வாறு செயலாக்கம் செய்யாத செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காத கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்