அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது – சு.வெங்கடேசன் எம்பி

Default Image

அஞ்சல்துறை பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்குமான படிவங்கள், பணவிடைப் படிவங்கள் ஆகியவையில் தமிழ் அகற்றப்பட்டுள்ளது என சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்.

இதுகுறித்து மதுரை சு.வெங்கடேசன் எம்பி., அஞ்சல் பொது மேலாளருக்கு எழுதிய கடிதத்தில், அஞ்சல் துறையில் பண விடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மின்னணு படிவங்கள் வந்தவுடன் பண விடையில் தமிழுக்கு விடை கொடுக்கப்பட்டு விட்டது. சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்களும் தமிழில் இருந்தன. தற்போது இல்லை.

அலைபேசிகளில் தமிழ் எழுத்துக்களை பதிவிறக்கம் செய்து பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் பரவலாக நடைமுறையில் உள்ளது. வணிக நோக்கங்களுக்காக பெரிய தனியார் நிறுவனங்கள் கூட தமிழில் உரையாட, தமிழில் செய்தி பரிமாற தொழில் நுட்ப ஏற்பாடுகளை தருகிறார்கள்.

ஆனால் ஒரு அரசுத் துறை, சாதாரண மக்களின் இதய நாளமாக விளங்க வேண்டிய துறை மக்கள் சேவை என்ற நோக்கில் இருந்தும் செய்யவில்லை, லாப நோக்கிலும் கூட செய்யவில்லை என்றால் அலட்சியம் என்பதா? பாரபட்சம் என்பதா? திணிப்பு என்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலாவதாக, நமது தேசம் மொழிப் பன்மைத்துவம் வாய்ந்தது. அரசு அலுவலகங்கள் இந்த பேருண்மையை உள்வாங்கி தங்களை அனுகும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை எளிதில் பெற வழிவகை செய்ய வேண்டும். இரண்டாவதாக, வாடிக்கையாளர்கள் ஒரு சேவையை பெறும் போது அதற்கான விதிகளை, நிபந்தனைகளை முழுமையாக அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதுவே, எந்தவொரு ஒப்பந்தத்தின் அடிப்படைத் தேவையாகும். அவர்கள் அஞ்சல் சேமிப்புகளை எடுக்கும் போது இரு தரப்பிற்கும் உள்ள பொறுப்புகள் தெளிவாய் பகிரப்பட வேண்டும். இல்லையெனில் பின்னர் சிக்கல்கள் எழும். இதில் வாடிக்கையாளர்களே கடைசியில் பலி ஆவார்கள்.

மூன்றாவது, இந்தி பேசாத மாநிலங்களில், மாநில மொழிகளில் சேவையை தருவது மத்திய அரசு நிறுவனங்களின் கடமையாகும்.

நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இரமணா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சாதாரண குடிமகன் வழக்கு விவரங்களை தெரிந்து கொள்ளும் சூழல் உருவாக்கப்படுவதே நீதி வழங்கல் முறைமை மீது நம்பிக்கையை உருவாக்கும் என்பதே அவர் கருத்தின்சாரம்.

எனவே வாடிக்கையாளர் சேவை தொடர்பான எல்லா படிவங்களும் – பண விடை, சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்கள் உட்பட தமிழில் இருப்பதையும், அதற்கேற்ற தொழில் நுட்ப ஏற்பாட்டை இணைய வழியில் தருவதையும் உறுதி செய்ய வேண்டுகிறேன். இந்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படுமென்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்