மீட்கப்பட்ட தனியார் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தும் – அமைச்சர் சேகர் பாபு..!

Default Image

சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. இவற்றில் கதவு எண்.768-ல் 44.5 கிரவுண்ட் பரப்பில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இவற்றில் 2010-ம் ஆண்டு 12.5 கிரவுண்ட் இடம் திருக்கோயில் வசம் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டது.

99 ஆண்டு குத்தகை காலம் முடிவுற்ற பின் இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78-ன் கீழ் சுவாதீன உத்தரவு பெறப்பட்டு பின்னர் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் மூலம் வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கில் திருக்கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. அதன் அடிப்படையில் இப்பள்ளிக்கூடத்தை தங்களால் தொடர்ந்து நடத்த இயலாது என கலவவக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிறுவனத்தினர் தெரிவித்து 13.06.2021 அன்று காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் செயல் அலுவலரிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலரால் 32 கிரவுண்ட் இடம் மற்றும் பள்ளி கட்டடங்களுடன் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டு திருக்கோயில் வசம் முழுமையாக சுவாதீனம் பெறப்பட்டது.

இந்த நிலத்தில் இதுவரை நடத்தப்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் பெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வந்த விவரம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் எடுத்துச் செல்லப்பட்டது. அதனை கேள்வியுற்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுவரை பயின்று வந்த மாணவச் செல்வங்களின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இப்பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்திட உத்தரவிட்டார்.

இந்நிலையில், சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும், பள்ளியில் ஏற்கனவே உள்ளபடி கட்டணம் வசூலிக்கப்படும், ஆசிரியருக்கு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்