2வது நாளாக தொடரும் சோதனை… திமுக எம்பி வீடு , அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள்..!
அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுலவகம், கல்லூரி உளிட்ட பல்வேறு இடங்கள் , ஜெகத்ரட்சகன் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. நேற்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உறவினர்கள், நண்பர்கள் என ஒரு சில வீடுகளில் சோதனை நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு, பூந்தமல்லியில் உள்ள கல்லூரி, தி நகரில் உள்ள ஹோட்டல், பட்டாபிராமில் உள்ள வீடு ஆகியவற்றில் 2ஆம் நாளாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2ஆம் நாளில் காலை 7 மணி முதலே வருமானவரித்துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர் என கூறப்படுகிறது. இந்த சோதனையானது நாளை வரை தொடரும் எனவும், நாளை தான் எந்தந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு ஆயில் கம்பெனியில் ஜெகத்ரட்சகனுக்கு நெருங்கிய நண்பர் பெரும்பாலான பங்குகளை வைத்து இருபப்தாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் அதன் பெயரில் தான் இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாகவும் தனியார் செய்தி நிறுவனத்தில் கூறப்பட்டுள்ளது. உறுதியான தகவல்கள் நாளை தான் தெரியவரும்.
முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாக கூறி அவரது 80கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டன.