மறைந்த லட்சுமி யானைக்கு கற்சிலை.! சுற்றுலாத்துறை அமைச்சர் உறுதி.!
புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் பெண் யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கற்சிலை நிறுவப்பட நடவடிக்கை எடுக்கப்டும் என அமைசர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் பெண் யானை லட்சுமி உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தது. நேற்று மறைந்த லட்சுமி யானை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பலரும் கண்ணீர் மல்க லட்சுமி யானைக்கு மரியாதை செலுத்தினர். தற்போதும் பலரும் வந்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், யானை லட்சுமி, நேற்று கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு சிறிய அளவில் மேடை ஒன்று போடப்பட்டுள்ளது. யாரும் அதன் மீது ஏறிவிடாத வண்ணம் தடுப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், யானை லட்சுமிக்கு ஓர் கல்லறை அமைத்து, அதன் மீது கற்சிலை அமைக்கவும் கோவில் நிர்வாகத்துடம் பேசியுள்ளோம், விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். என கூறினார்.
அடுத்ததாக, புது யானை வாங்குவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். யானை வாங்குவதை விட யானை வளர்க்க உரிமம் வாங்குவது தற்போது கடினம். ஆகவே, அது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும், லட்சுமி யானையின் தந்தம் கேரள கோவில்களில் உள்ளது போல அலங்கரிக்கப்பட்டு மணக்குள விநாயகர் கோவிலில் வைக்கப்படும் எனவும் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டார்