2025-ஐ கொண்டாட்டத்துடன் வரவேற்ற பொதுமக்கள்.. நள்ளிரவு வானவேடிக்கை.., சிறப்பு பூஜைகள்…
இசை, நடனம், வான வேடிக்கை என கொண்டாட்டத்துடனும், கோயில்கள் , தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகளுடனும் பொதுமக்கள் 2025 புத்தாண்டு தினத்தை வரவேற்றனர்.
சென்னை : நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என பல்வேறு விதமாக 2025இன் முதல் நாளை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக சென்னை , கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பிரதான நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
வழக்கம் போல, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நள்ளிரவு 12மணி வரை துள்ளலான இசை , நடனம், பாட்டு என புத்தாண்டை அங்குள்ள பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.
சென்னை பெசன்ட் நகரிலும் வழக்கம் போல புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. அங்கு நிகழ்த்தப்பட்ட கண்கவர் வாணவேடிக்கைகள் பார்ப்போரை பிரமிக்க செய்தது. மெரினா கடற்கரை பகுதி போல பெசன்ட் நகர் பகுதியும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குதூகலித்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி அன்னை மாதா ஆலயத்தில் நள்ளிரவு முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 2025 புத்தாண்டை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிராத்தனைகளுடன் வரவேற்றனர். அதே போல பல்வேறு கோயில்களிலும், தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று புத்தாண்டை வழிபாட்டுடன் துவங்கினர்.
கோவையில் மெழுகுவர்த்தி பலூன்கள் மற்றும் வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.