பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசனையை முடித்துவிட்டு ஜெயக்குமார் புறப்பட்டபோது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பற்றி ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வளர்மதி, சிவி சண்முகம் எம்பி, வகைச்செல்வன், செம்மலை, ஆர்பி உதயகுமார், பொன்னையன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. திட்டமிட்டபடி பொதுக்குழு ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும். ஒற்றை தலைமை குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் சேர்ந்து முடிவு செய்வோம். ஒற்றை தலைமை பொறுப்புக்கு குறிப்பிட்ட நபரை யாரும் சொல்லவில்லை.
யாருடைய மனமும் புண்படும் வகையில் யாரும் வேறுபாடு காட்டமாட்டார்கள். அதனால் எந்த முடிவாக இருந்தாலும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தான் எடுக்கப்படும். ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும் அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். அதிமுகவை ஜெயக்குமார் அழித்துக் கொண்டிருப்பதாக கட்சி அலுவலகத்தின் வெளியே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முழக்கமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பேச்சு தொடங்கியதில் இருந்து ஒரே பரபரப்பாக காணப்படுகிறது. ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை அதிமுகவில் வலுத்துள்ள நிலையில் கட்சி அலுவலகம் சென்றுள்ளார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பி.எஸ். வருகையை அறிந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிர்வாகிகள், ஆலோசனை கூட்டத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.