தனியார் தொழிற்சாலை மீது புகார்..மக்களை பாதுகாக்குமா அரசு..!

Default Image

கரூர் அருகே இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையால், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாயனூரை அடுத்த நத்தமேட்டில் மஹா அக்ரிகல்சுரல் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் வெள்ளரிக்காய் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது. ஒப்பந்த முறையில் ஹைப்பிரிட் வெள்ளரிக்காயை விவசாயிகளிடம் இருந்து பெற்று, அவற்றை அமிலத்தில் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு இந்நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. வெள்ளரிக்காய் பதப்படுத்திய பின்னர் அமிலம் கலந்த அந்த நீரையும் அழுகிய வெள்ளரிக்காய்களையும் பூமிக்குள் போட்டு புதைத்து விடுவதாகக் கூறப்படுகிறது.

அவை நிலத்தடி நீருடன் கலப்பதால், அப்பகுதியிலுள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள தண்ணீர் மாசடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. நத்தமேடு, கோரகுத்தி, மோட்டாங்கிணம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதன் மூலம் பாதிப்படைந்துள்ளதாகக் கூறுகின்றனர். மாசுபட்ட இந்தத் தண்ணீரினால், பயிர்களின் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, இந்தத் தண்ணீரைப் பருகும் கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாவதாகக் கூறுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகின்றனர் கிராம மக்கள்.

அவர்களின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மஹா அக்ரிகல்சுரல் ப்ராடக்ட்ஸ் நிறுவன மேலாளர், பதப்படுத்தலுக்குப் பின் கிடைக்கும் பழரசத்தை தொட்டிகளில் ஊற்றி ஆவியாக்கி விடுவதாகக் கூறினார்.

நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்க மறுக்கும் கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் நேரடியாக வந்து இப்பகுதி நிலத்தடி நீரை ஆய்வு செய்து உரிய தீர்வு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்