தக்காளி விலை குறையும்… இதே நிலை தொடர்ந்தால் ரேஷன் கடைகளில் காய்கறிகள் விற்கப்படும்… அமைச்சர் பெரிய கருப்பன்.!
தக்காளி விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும், 3-4 நாட்களுக்கு பிறகு விலை குறையும் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உயர்ந்துள்ள தக்காளி விலை பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தக்காளி விலை கிலோ ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை, பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் தக்காளி விலை உயர்வு மக்களை பாதிக்காத வண்ணம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் 800 டன் தக்காளி வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 300 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விலை உயர்வை அடைந்துள்ளது. தேவைக்காக அண்டை மாநிலங்களிலும் தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 62 பண்ணை பசுமை நுகர்வோர் மையங்களில் தக்காளி விலை ரூ.60 க்கு விற்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர் பெரிய கருப்பன், இன்னும் 3-4 நாட்களில் தக்காளி விலை கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு வரும். அப்படியே இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் காய்கறிகளை விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.