மாடு திருட்டு., ஆந்திரா கொள்ளை., 60 பேர் கொண்ட கும்பல்.! ஏ.டி.எம் கொள்ளையர்களின் ‘பகீர்’ பிண்ணனி..,
நாமக்கல் வெப்படையில் பிடிபட்ட கொள்ளையர்கள் 60-70 பேர் கொண்ட கும்பலாக செயல்பட்டு வந்துள்ளனர். கேரளா, ஆந்திரா , தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என காவல்துறை தகவல்.
நாமக்கல் : நேற்று அதிகாலை கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்-களில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட ஒரு கும்பல் , கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார் , கொள்ளையடித்த பணம் உள்ளிட்டவற்றை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் தப்பி வந்துவிட்டனர். அந்த கொள்ளையர்கள் பற்றி தமிழக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது .
பின்னர், சினிமா பாணியில் நாமக்கல் தேசிய நெடுசாலையில் குமாரபாளையம் அருகே அந்த கண்டெயினரை போலீசார் மடக்கி பிடித்தனர். வெப்படை அருகே, கொள்ளையர்களை பிடிக்க முயல்கையில் நடந்த என்கவுண்டரில் ஒரு கொள்ளையன் உயிரிழந்தான். இன்னொருவருவருக்கு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொள்ளையர்கள் பிடிக்கப்பட்ட செய்தி கேரளா காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டு, அவர்களும் நேற்று நாமக்கல் வந்திறங்கி கொள்ளையர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த கும்பலுக்கு பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம் கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆந்திர காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இப்படியான சூழலில், ஏ.டி.எம் கொள்ளையர்கள் பற்றிய பல்வேறு தகவல்களை நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், ” நாமக்கல் வெப்படையில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் பெரிய குழுவாக செயல்பட்டு வந்துள்ளனர். பிடிபட்ட கொள்ளையர்களின் இருப்பிடம், அவர்களின் வங்கி கணக்கு இருப்புகள், வாங்கிய சொத்து விவரங்கள் குறித்து விசாரணை செய்து வருகிறோம். இந்த ஏடிஎம் கொள்ளை கும்பலின் மூளையாக செயல்படும் முக்கிய நபர் யார் என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் கடந்த 2021ம் ஆண்டு மகாராஷ்டிராவில் மாட்டை திருடச் சென்று அம்மாநில போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். அப்போது அவர்கள் தங்கள் முகவரியை மாற்றி கொடுத்தாலும், காவல்துறை பதிவேட்டில் அவர்களது புகைப்படம், கை ரேகை ஆகியவை தெளிவாக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் ஆந்திரா மாநிலத்தில் கடப்பா மாவட்டத்தில் இதே கும்பல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இந்த கொள்ளை கும்பலில் மொத்தம் 60-70 பேர் செயல்பட்டு வருகின்றனர். திருடுவதில் கைதேர்ந்த 6 பேரை அந்த கும்பல் தேர்வு செய்து வெல்டிங் செய்ய ஒருவர், ஓட்டுநர் என குழுவாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அந்த கும்பல் முதலில் நோட்டமிட்டு இடத்தை தேர்வு செய்து, பின்பு திட்டமிட்டு கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து ஏ.டி. எம்.மிஷினை உடைக்க பயன்படுத்திய வெல்டிங் மிஷின், வெல்டிங் ராட், மின்சாதன உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பல் தான் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.” என நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.