அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உடனடியாக ஞானசேகரன் என்பவரை அதிரடியாக கைது செய்தது. அவரிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவருக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என பல அரசியல் தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கேட்டுக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை எம்ஜி.ஆர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த சம்பவம் குறித்து காட்டத்துடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் என ஞானசேகரனை காவல்துறை கைது செய்துள்ளது. அவர் மீது இதற்கு முன்னதாகவும் பல வழக்குகள் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
முதலில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அவரை முதலில் கைது செய்துவிட்டு அதன் பிறகு எதற்காக விடுவித்தீர்கள்? எந்த விதத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார் எனக்கு புரியவில்லை. பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்ற புகார் வந்த பிறகு அவரை கைது செய்யாமல் ஏன் விடுவித்தீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், சார் என்று குறிப்பிடுவது யார் என்று இதுவரை தெரியவில்லை. அந்த சார் என்பவர் யார் என்பதை தெரிவிக்க காவல்துறை மறுக்கிறது. முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். ஆனால், நேற்று காவல்துறை அதிகாரி பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல்துறைக்குப் புகார் வந்தது என்று கூறுகிறார். எனவே, இருவரும் மாற்றி மாற்றி சொல்வதால் குழப்பம் நிலவுகிறது. எனவே, இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கவேண்டும்.
இதில் ஆளும் கட்சிகளை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கிறது. இதெல்லாம் பார்க்கும்போது ஆளும் கட்சியை அவர் சேந்தவர் என்பதால் அவரை தப்பிக்க வைக்க காவல்துறை செயல்படுகிறதோ என்கிற அச்சம் மக்களுக்கு இடையே எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு சரியான நீதி கிடைக்க நடுநிலையாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.