பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை- அமைச்சர் ரகுபதி விளக்கம்!

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கைதானவர், திமுகவை சேர்ந்தவர் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

minister regupathy

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவரை நேற்று கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைதாகி இருக்கும் ஞானசேகரன் முன்னதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மிகவும் வைரலாக பரவியது. இதனையடுத்து, இவர் திமுகவை சேர்ந்தவர் என்கிற செய்தியும் பரபரப்பாக கிளம்பியது. இதனையடுத்து, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள் என குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த சூழலில் கைதான ஞானசேகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது ” கண்டிப்பாக, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரப்படும்.பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் தரலாம்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். மாணவி வன்கொடுமை வழக்கை மறைக்க வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன்  திமுகவை சேர்ந்தவர் என்கிற வதந்தியான ஒரு தகவல் பரவி வருகிறது. அவரிடம் திமுக என்ற உறுப்பினர் அட்டை கூட இல்லை.

தற்போது வைரலாகி கொண்டு இருக்கும் அந்த புகைப்படத்தை நீங்க பாத்தீங்கன்னா, துணை முதல்வருக்கும் அந்த நபருக்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்கும். நாங்க ஒரு இடத்துக்கு போகிறோம் என்றால் , பக்கத்துல யார் வர்றாங்க, எதிர்ல யார் வர்றாங்க என்று பார்த்து, கூட நின்னு செல்ஃபி எடுக்கிறவங்கலெல்லாம் தடுக்க முடியாது.

அந்த நபர் சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்தவர். அங்கு மா.சுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவிக்க யார் வேண்டுமானாலும் வரலாம், அந்தளவுக்கு அந்த பகுதி மக்களுக்கு மா.சுப்பிரமணியன் நிறைய உதவி செய்துகொடுத்து இருக்கிறார்.  எனவே, அப்படி அவரை பார்த்து நன்றியை தெரிவித்துக்கொள்ளும்போது சிலர் புகைப்படம் எடுப்பது வழக்கம். அப்படி கூட அந்த நபர் புகைப்படம் எடுத்திருக்கலாம்.

எனவே, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் தி.மு.க. அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவருக்கும் தி.மு.க.-விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவருக்கு தண்டனை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம்” எனவும் அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்