இண்டியா கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் சேர்ந்து விரட்டி அடிப்பார்கள் – வானதி சீனிவாசன்
வாரிசு அரசியல், ஊழலில் திளைக்கும் இண்டியா கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் சேர்ந்து விரட்டி அடிப்பார்கள் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், மாநில சுயாட்சி: உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கான எனது குரல்: என்ற தலைப்பில் ஆடியோ பதிவு வெளியிட்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், “தனக்கென தனித்துவமான கொள்கைகளை கொண்ட கட்சி திமுக.
நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தைக் காக்க போராடும் கட்சி. திமுகவின் கொள்கைகளில் முக்கியமானது, மாநில சுயாட்சி. இந்தியா கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். நம் மக்களிடம் ஏராளமான சமய நம்பிக்கைகள் உள்ளன. இந்தியா பல்வேறு மலர்கள் நிரம்பிய அற்புதமான பூந்தோட்டம். அதனால்தான், கூட்டாட்சி கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியாவை உருவாக்கினார்கள் என்று வழக்கம்போல வசனம் பேசியிருக்கிறார்.
சனாதன விவகாரத்தை அரசியலாக்குகிறார் அண்ணாமலை – அமைச்சர் உதயநிதி தரப்பு வாதம்!
திமுகவுக்கென்று தனித்துவமான கொள்கைகள் இருப்பதாக ஸ்டாலின் அவர்கள் சொன்னது உண்மைதான். அரை நூற்றாண்டுக்கு மேலாக ஒரு குடும்பத்திடம் மட்டும் கட்சித் தலைமை இருப்பதும், ‘அப்பா மகன் – பேரன்’ என மூன்றாவது தலைமுறை வாரிசு அரசியலும், ‘அப்பா முதலமைச்சர், மகன் அமைச்சர், தங்கை எம்.பி, மாமன் மகன் எம்.பி’ என ஒரே குடும்பத்தைச் சுற்றி அதிகாரம் குவிக்கப்பட்டிருப்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மன்னராட்சி போல் இருப்பது, ஊழலில் திளைப்பதும், திமுகவின் தனித்துவமான கொள்கைகள் தான்.
இவை ஒருநாளும் பாஜகவில் சாத்தியம் இல்லைதான். ‘எல்லாருக்கும் எதுவும் உண்டு’ என்று சொல்லாமல்,’ இன்னாருக்கு இதுதான்’ என்று சொல்வதுதான் திமுகவின் திராவிடம். இதை ஒப்புக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கோடானு கோடி நன்றி. பா.ஜ.க. ஆட்சியில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு, நம் அரசியல் சட்டம் தந்த கூட்டாட்சிக் கருத்தியல், ஜனநாயகம் என எல்லாம் மக்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது என்றும் ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார்.
‘ஒற்றை குடும்பம், ஒற்றை குடும்பத் தலைமை, ஒற்றை குடும்ப அதிகாரம்’ என்பதுதான் திமுக. மத்தியில் கூட்டாட்சி இல்லை என்று கதறும் முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றும் தனித்து ஆட்சி அமைத்தது ஏன்? பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருந்தும் கூட்டணி கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் வெற்றிக்கு மட்டும் கூட்டணி கட்சிகளை பயன்படுத்தி விட்டு, ஆட்சிக்கு வந்ததும் கூட்டணி கட்சிகளை கொத்தடிமைகளாக நடத்துவதும்தான் மாநில சுயாட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்.! விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு.!
2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், பாமக ஆதரவுடன் தான் ஆட்சி அமைத்தது. ஆனாலும், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட தனித்துவமான கொள்கைகள் கொண்ட கட்சியின் தலைவரான ஸ்டாலின் அவர்கள், மத்தியில் கூட்டாட்சி பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ‘மத்தியில் குடும்ப கட்சிகளின் கூட்டாட்சி’, ‘மாநிலங்களில் ஒற்றை குடும்ப கொள்ளை ஆட்சி’ இதுதான் ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் அறிவிக்கப்படாத அடிப்படை கொள்கை.
அதைதான் வேறுவேறு அலங்கார வார்த்தைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார் அண்ணன் ஸ்டாலின் அவர்கள். பாரதம் என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு அல்ல. முதலில் பாரதம் என்ற நாடுதான் உருவானது. விடுதலை அடைந்தபோது தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலம் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்புதான் திமுக உருவானது. இந்தியா பல்வேறு மலர்கள் கொண்ட அற்புதமான பூந்தோட்டம் தான்.
அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், திமுக ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது அதீத வெறுபை கக்குவது ஏன்? அதை ஒழிப்பேன் என இப்போதும் பேசுவது ஏன்? இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற விடாப்பிடியாக மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, வாரிசு அரசியல், ஊழலில் திளைக்கும் இண்டி கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் சேர்ந்து விரட்டி அடிப்பார்கள் என கூறியுள்ளார்.