இன்று பள்ளிகள் திறப்பு;முகக்கவசம் கட்டாயமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது.
அதே சமயம்,9&10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.10 மணியிலிருந்து மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். அதைப்போல 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தலாம் எனவும்,எனினும்,பள்ளி அமைவிடம்,போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில்கொண்டு பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் துவங்கும் நேரம்,முடிவடையும் நேரம் எப்போது என்பதை பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில்,இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிய முதல் 20 நாட்களுக்குள் புத்தகம்,புத்தகப்பை,சீருடைகள் வழங்கப்படும்.மேலும்,கடந்த ஆண்டு செப்டம்பர்,நவம்பர் மாதங்களில் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.எனினும்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பின் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படும்.
இதனிடையே,மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவது என்பது குறித்த அறிவிப்பை நாங்கள் இன்னும் அறிவிக்கவில்லை.இது தொடர்பான அறிவிப்பு எங்களுக்கு வந்த பின்பு கண்டிப்பாக மாணவர்களுக்கு எடுத்துரைப்போம்.
இதற்கிடையில்,பள்ளிக்கட்டணம் உடனடியாக கட்ட சொல்லி மாணவர்களை நிர்பந்திக்ககூடாது,அவ்வாறு கட்டவில்லை என்றால் வகுப்பறைக்கு வெளியில் அமர வேண்டும் என குழந்தைகளின் மனதை பாதிக்கக் கூடிய செயல்பாடுகளில் பள்ளிகள் ஈடுபடக்கூடாது.தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.