ரஜினிக்கும் விஜய்க்கும் கட்சி தொடங்க சொன்ன ஒரே ஆள்? வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் விஜய் – விசிக எம்.பி.ரவிக்குமார்!
விஜய் கட்சி தொடங்கியது எங்களுடன் கூட்டணி வைப்பதற்குதானா? என்று திருமாவளவன் குறித்த விஜய் பேச்சுக்கு விசிக எம்.பி., ரவிக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
சென்னை: தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. திருமாவளவனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடாமல் கூட்டணி தடுக்கிறது என்று விஜய் பேசியதும், மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் சர்ச்சைக்கான முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளன.
இந்த நிலையில், திருமாவளவன் குறித்த விஜய் பேச்சுக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் தளத்தில், விஜய் பேசியதைப் பார்த்தால், அவர் கட்சி ஆரம்பித்ததே எங்களுடன் கூட்டணி சேரத்தான் என எண்ணத் தோன்றுவதாக விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால், அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது.
தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து ‘அழைப்பு’ விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. இதையெல்லாம் பார்க்கும்போது எல்லாரும், ரஜினிகாந்தை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் விஜயை கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள்.
‘விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே’ என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி சந்துரு அவர்களிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது” என விஜய்யை விமர்சனம் செய்துள்ளார்.
அரசியல் ஒப்பனையின் ஆயுள்
தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்கள் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட திரு விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும்… pic.twitter.com/G545YaQmjA
— Dr D.Ravikumar (@WriterRavikumar) December 6, 2024