சட்டமன்றத்தில் பாஜகவினரை அமர வைப்பது மட்டுமே ஒரே இலக்காக இருக்க வேண்டும்- எல்.முருகன் பேச்சு .!

சட்டமன்றத்தில் பாஜகவினரை அமர வைப்பது மட்டுமே ஒரே இலக்காக இருக்க வேண்டும் என பாஜக அரசு தொடர்பு அணியின் செயற்குழுக் கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் 72-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள பாஜகவின் தலைமையகமான கமலாயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தேசியக்கொடி ஏற்றி பாரத மாதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் துரைசாமி மற்றும் நடிகை குஷ்பூ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பாஜக அரசு தொடர்பு அணியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் பாஜக அரசு தொடர்பு அணியின் முக்கிய பணி, தேர்தல் நேரத்தில் கட்சியும் சிறிய தவறு செய்தாலும் அது பெரிதாக பேசப்படும் என கூறினார்.
மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் சட்டமன்றத்தில் பாஜகவினரை அமர வைப்பது மட்டுமே ஒரே இலக்காக இருக்க வேண்டும் என கூறினார்.