எவரெஸ்ட் சிகரம் போல் உயருகிறது தொற்று எண்ணிக்கை..! – மா.சுப்பிரமணியன்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், ஓமைக்ரான் பரவலால் பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அடையாறில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்றும், உலகளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக நேற்று 26.06 லட்சம் பேருக்கு ஒரு நாள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், இரவு நேர பொது முடக்கத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், பொது இடங்களுக்கு செல்பவராகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதியுடைய 4 லட்சம் பேருக்கு ஜன.10 தேதி தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.