ஜாவத் புயல்:நாகை,பாம்பனில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததன் காரணமாக,நாகை,பாம்பன் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மாலை புயலாக வலுப்பெற்றது. அதற்கு ஜாவத் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கி, இன்று காலை ஒடிசாவின் புரி அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
நேற்று இரவு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வலுவிழந்த ஜாவத் புயல் விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 180 கிமீ தொலைவில் கோபால்பூருக்கு தெற்கே 260 கிமீ தொலைவில் (ஒடிசா , பூரியில் இருந்து 330 கிமீ தென்-தென்மேற்கில்) உள்ளது. தற்போது வடக்கு-வடகிழக்கு திசையில் தொடர்ந்து நகர்கிறது என தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ஜாவத் புயல்,தற்போது ஒடிசா கரையோரம் நிலை கொண்டுள்ளது எனவும்,இந்த புயல் மேலும் வலுவிழந்து வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு இன்று நண்பகலில் பூரி அருகே ஒடிசா கடற்கரையை நெருங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
The DD lay centered at 0530hrs IST of 05th Dec, over northwest & adjoining westcentral BoB near Lat18.2°N, Long85.4°E, about 130km SSE of Gopalpur. Likely to move north-northeast wards, weaken further into a Depression and reach Odisha coast near Puri around noon of today. pic.twitter.com/vEqvsiddnW
— India Meteorological Department (@Indiametdept) December 5, 2021
இந்நிலையில்,நாகை,பாம்பன் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.முன்னதாக இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில்,ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததன் காரணமாக,தற்போது 1 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.