திருமணம் முடிந்த கையோடு நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற புதுமண தம்பதி!
இன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த போராட்டத்தின் போது திருமணமான இடத்தில் இருந்து நேராக புதுமணத் தம்பதிகள் சென்னையில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தின்போது மணக்கோலத்தில் வந்து புதுமண தம்பதிகள் ஆதரவு தெரிவித்தனர்.
பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். மேலும், நீட் தேர்வுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.