அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.
நாளை போப் ஆண்டவர் இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை ஒருநாள் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று வாட்டிகன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். போப் பிரான்சிஸின் அடக்க நிகழ்வு நாளை (ஏப்ரல் 26) காலை 10 மணி அளவில் புனித பீட்டர் சதுக்கத்தில் வைத்து நடைபெறவுள்ளது. அவரது உடல் ஏப்ரல் 23 முதல் புனித பீட்டர் பசிலிக்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு உள்ளூர் முதல் உலகநாட்டு தலைவர்கள் வரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் இன்று அமைச்சர் நாசர் மற்றும் திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நாளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு போப் பிரான்ஸிசின் இறுதி சடங்களில் இந்தியா சார்பாக பங்கெடுக்க உள்ளார்.
போப் பிரான்சிஸின் மறைவை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சகம் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அறிவித்தது. கடந்த ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களும், அவரது அடக்க நிகழ்வு நடைபெறும் நாளான நாளை (ஏப்ரல் 26) துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் சில உத்தரவுகளை பிறப்பித்தது.
அதனை இன்று தமிழ்நாடு தலைமை செயலர் முருகானந்தம் அறிவித்துள்ளார். அதன்படி, நாளை (ஏப்ரல் 26) இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என அறிவுத்தி உள்ளதால் தமிழகத்தில் நாளை அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்படும். நாளை அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் எதுவும் நடத்தப்படாது என்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.