பணம் பறிமுதல் செய்யப்பட்ட வணிக வளாகம் அதிமுக பிரமுகருக்கு சொந்தமானது – தங்க தமிழ் செல்வன்
பணம் பறிமுதல் செய்யப்பட்ட வணிக வளாகம் அதிமுக பிரமுகருக்கு சொந்தமானது என்று தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
ஆண்டிப்பட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் விடியவிடிய சோதனை நடைபெற்றது. வருமான வரிச்சோதனையில் 94 சிறு பாக்கெட்டுகளில் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒவ்வொரு பாக்கெட்டிலும் வாக்காளரின் பெயர் மற்றும் 300 ரூபாய் பணம் என எழுதப்பட்டிருந்தது.சோதனையில் ரூ.1.50 கோடி பணம் சிக்கியது.அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தற்காக அமமுக மாவட்ட துணை செயலாளர் பழனி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுகவின் தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், பணம் பறிமுதல் செய்யப்பட்ட வணிக வளாகம் அதிமுக பிரமுகருக்கு சொந்தமானது . எங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பணம் பறிமுதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை .வருமான வரித்துறை திட்டமிட்டு நாடகமாடுகிறது என்று தெரிவித்துள்ளார்.