‘2026ல் மன்னராட்சியை உடைக்க வேண்டும்’ – விசிக ஆதவ் அர்ஜுனா!

`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' விழா மேடையில் பேசிய ஆதவ் அர்ஜுனா பேசியது தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆக இருந்து வருகிறது.

Aadhav Arjuna

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும்,`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழாவில், அம்பேத்கர் நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருவும், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும் பெற்றுக்கொண்டனர்.

இதற்கு முன்னதாக விழா மேடையில் பேசிய ஆதவ் அர்ஜுனா பேசியது தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆக இருந்து வருகிறது. ஒருபக்கம் மன்னராட்சியை ஒழிக்க வேண்டுமென திமுகவை தாக்கிவிட்டு, “கருத்தியல் பேசிய கட்சிகள், ஏன் அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை?” எனக் கேள்வி எழுப்பிய அவர், மேலும், கருத்தியல் தலைவர் தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்றார்.

இதன் மூலம், ஆதவ் அர்ஜுனா குறிப்பிடும் கருத்தியல் தலைவர் திருமாவா? விஜய்யா? யார் என்று தெரியவில்லை. ஆனால், திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மன்னராட்சியை ஒழிக்க வேண்டுமென பேசியது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி இருக்கிறது.

ஆதவ் அர்ஜுனா பேசியது:

இந்திய அரசியலில் இரு தலைவர்கள் முக்கியமானவர்கள் ஒருவர் காந்தி, மற்றொருவர் அம்பேத்கர். தமிழகத்தில் மன்னராட்சியை அம்பேத்கரின் கொள்கைகள் உடைக்கும். தமிழ்நாட்டை ஆள வேண்டுமென்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆள வேண்டும்.

தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. மன்னராட்சியை எதிர்த்தால் சங்கி என்று சொல்கிறார்கள். 2026 தேர்தலுக்கான பணிகள், மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியது போல, பிறப்பால் ஒரு முதலமைச்சர் இனி உருவாகக்கூடாது.

அம்பேத்கர் நூலை தலித் அல்லாத விஜய் வெளியிடுவதன் மூலம் திருமாவளவனின் கனவு நிறைவேறி உள்ளது. தமிழ்நாட்டில் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றியவர் திருமாவளவன் தான். நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்கவிட்டாலும் அவருடைய மனசாட்சி இங்கேதான் இருக்கிறது.

சகோதரர் விஜய்க்கு அரசியல் தெரியுமா? கொள்கைகள் தெரியுமா? என பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. கொள்கைகள் பேசிய பல கட்சிகள் ஏன் அம்பேத்கரை இதுவரை மேடையில் ஏற்றவில்லை? புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து வருகிறார். புதிய வரலாற்றை உருவாக்கும் மேடையாக இம்மேடை உருவாகி உள்ளது. விஜய் வேங்கைவயலுக்கு செல்ல வேண்டும், நீங்க களத்திற்கு வாங்க, ஆதிக்கத்திற்கு எதிராகப் பேசினால் எதிரிகள் உருவாவது இயல்புதான் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஒரு நிறுவனம் ஒட்டு மொத்த சினிமா தொழிலையும் கட்டுப்படுத்தி அரசியல் மூலம் லாபம் ஈட்டுகின்றனர். இன்று வரை அதற்கு ஒரு குரல் இல்லை. இந்த குரல் எங்கிருந்து வர வேண்டும்? ஏன் சினிமா தொழில் ஒரு நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது? 4 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை எப்படி ஒரு நிறுவனம் கட்டுப்படுத்த முடிகிறது? ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய சினிமா, எப்படி ஒரே நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது? என அடுக்கடுக்காய் கேள்விகளை முன் வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்