அடுத்தடுத்து மாறும் திமுக மேயர்கள்… நெல்லையை தொடர்ந்து இன்று கோவையில்…
மேயர் தேர்தல்கள் : நேற்று நெல்லை மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில் திமுக கூட்டணிக்கு 51 கவுன்சிலர்கள் ஆதரவு உள்ளது. முன்னாள் முன்னர் மேயர் சரவணன் அவர்களுக்கும் , திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ந்து அதிருப்தி நிலை நிலவி வந்ததை அடுத்து , தனிப்பட்ட காரணங்களை கூறி சரவணன் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.
நெல்லை மேயர் தேர்தல் :
மேயர் சரவணன் ராஜினாமாவை அடுத்து , நெல்லை மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கிட்டு எனும் ராமகிருஷ்ணன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிருப்தி வேட்பாளராக பவுல்ராஜ் களமிறங்கினர். நேற்று நடைபெற்ற தேர்தலில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும், பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனர். இதனை அடுத்து நெல்லை மாநகராட்சி புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்
கோவை மேயர் தேர்தல் :
நெல்லையை அடுத்து , கோவையிலும் அதே போல ஏற்கனவே பொறுப்பில் இருந்த கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்களுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே அதிருப்தி நிலை நிலவியது. இதனை அடுத்து உடல்நல காரணம் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட காரணங்களை குறிப்பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.
கோவை மேயர் பதவி காலியானதை அடுத்து இன்று (ஆகஸ்ட் 6) மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நெல்லையில் பெண் வேட்பாளர் தான் மீண்டும் களமிறக்கப்படுவதாக இருந்ததால், பெண் கவுன்சிலர்கள் இடையே போட்டி நிலவியது. கோவை 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் அம்பிகா, மாலதி, தெய்வானை, மீனா ஆகியோர் மத்தியில் போட்டி நிலவியது. இறுதியில் கோவை மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார்.
நெல்லையை போல கோவையில் அதிருப்தி வேட்பாளர் யாரும் இன்று களமிறங்கி விட கூடாது என திமுக மேலிட பொறுப்பாளர் கோவையில் முகாமிட்டு திமுக கூட்டணி கவுன்சிலர்களை கண்காணித்து வருகிறார். அமைச்சர்கள் கே.என்.நேரு , முத்துசாமி ஆகியோர் கவுன்சிலர்கள் மத்தியில் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று காலை 11 மணி அளவில் வேட்பாளர் ரங்கநாயகி வேட்புமனு தாக்கல் செய்து பின்னர் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சியில் 73 கவுன்சிலர்கள் உள்ளனர்.
அடுத்ததாக காஞ்சிபுரம்.?
அடுத்ததாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் இதேபோன்ற அதிருப்தி நிலைமை நிலவி வருகிறது. காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ்க்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே அதிருப்தி நிலை நிலவி வருகிறது. மொத்தமுள்ள 51 இடங்களில் 32 இடங்களில் திமுக கவுன்சிலர்களும் , 1 காங்கிரஸ் கவுன்சிலரும் வெற்றிபெற்று உள்ளனர். அதே போல 9 அதிமுக கவுன்சிலர்கள் , 2 பாமக கவுன்சிலர்கள் , 1 பாஜக கவுன்சிலர்கள் மீதம் சுயேச்சை கவுன்சிலர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ளனர்.
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு 13 கவுன்சிலர்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். இன்னும் 17 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. இப்படியான சூழலில் கடந்த ஜூலை 29இல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நல்லவேளையாக அந்த சமயம் திமுக கவுன்சிலர்கள் , சுயேட்சை கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. ஆனாலும் , இன்னும் மாநகராட்சி கூட்டத்தை மேயர் மகாலட்சுமி கூட்டாமல் இருக்கிறார். ஏற்கனவே நடந்த கூட்டத்தில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது.