செல்வன் படுகொலைக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் – சீமான் எச்சரிக்கை

Default Image

நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வன் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யவில்லையென்றால் மாநில அளவில் போராட்டம் நடத்துவோம் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது, குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சொக்கன்குடியிருப்பு ஊராட்சியின் நாம் தமிழர் கட்சி செயலாளர் அன்புத்தம்பி செல்வன் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். அச்செய்தி கேள்வியுற்ற நொடி முதல் இந்நொடிவரை பெருந்துயரமும், தாங்கவியலா வேதனையும் ஆட்கொண்டு நெஞ்சை முழுதாய்க் கனக்கச்செய்கிறது.

அம்மரணச்செய்தி தாங்கொணாத் துயரத்தையும், பெரும் மனவலியையும் தருகிறது. மீள முடியாதப்பேரிழப்பில் சிக்கிண்டிருக்கும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி செல்வனின் குடும்பத்திற்கும், உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த திருமண வேலு எனும் அதிமுக நிர்வாகிக்கும் இடப்பிரச்சனை காரணமாகச் சிக்கலிருந்ததால் அதுகுறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் காவல்துறையினர் ஒருபக்கச் சார்பாகச் செயல்படுவதாகவும் நீதிபதியிடம் முறையிட்டிருக்கிறார்.

இதனாலேயே, தட்டார்மடம் காவல்துறை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், ஆளுங்கட்சியைச் சேர்ந்த திருமணவேலுவின் அடியாட்களுடன் சேர்ந்து செல்வனைக் கடத்திச்சென்று தாக்கிக் கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்திருக்கிறது. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்தவரே ஆளுங்கட்சி நிர்வாகியோடு சேர்ந்துகொண்டு பச்சைப்படுகொலையில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது. சாத்தான்குளத்தில் காவல்துறையின் அட்டூழியத்தில் தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்ட செய்தி நாட்டையே உலுக்கிய நிலையில் தற்போது நடந்தேறியிருக்கும் இப்படுகொலை ஒட்டுமொத்தக் காவல்துறையினரும் வெட்கித்தலைகுனியத்தக்கதாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தம்பி செல்வன் மரணத்திற்கு நீதிவிசாரணை செய்யப்பட்டு, காவல்துறை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனும், அதிமுக நிர்வாகி திருமணவேலுவும், கொலையில் ஈடுபட்ட அடியாட்களும் உடனடியாகக் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், கைக்குழந்தையோடு நிற்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தம்பி செல்வனின் மரணத்திற்கு நீதிகேட்டு மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்