திமுக அமைச்சரை பாராட்டிய அதிமுக முக்கிய புள்ளி.!
தமிழக வரலாற்றில் பட்டியல் சமூகத்தவர்கள் நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பெறுவது இதுவே முதல்முறை.
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 4 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்படி, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 4 பட்டியலின அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை என்ற பெருமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய அமைச்சரவை பெற்றுள்ளது.
இதுவரை இல்லாத வகையில், கயல்விழி செல்வராஜ், கோவி.செழியன், மதிவேந்தன், சி.வி.கணேசன் ஆகிய 4 பட்டியலின அமைச்சர்கள், அமைச்சரவையில் உள்ளனர். இதில், கோவி.செழியன் திமுக சார்பில் அரசு தலைமைக் கொறடாவாக இருந்தவர்.
கோவி செழியன் அமைச்சராக பதவியேற்றதன் மூலம், இப்போது மாநில வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது, ஏனெனில் அவர் பட்டியலின சமூகத்திலிருந்து உயர்கல்வித் துறை இலாகாவை வகிக்கும் முதல் நபர் ஆவார்.
இந்நிலையில், இன்று உயர்கல்வித்துறை அமைச்சராக கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார் கோவி.செழியன். கோவி.செழியனுக்கு முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது, பட்டியலின அமைச்சராக கோவி செழியன் பொறுப்பேற்ற கொண்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நானும் அமைச்சர் கோவி.செழியனும் ஒரே நாளில் ‘முனைவர்’ பட்டம் பெற்றோம். எளியவன் நான் பள்ளிக்கல்வி அமைச்சராகப் பணியாற்றினேன்.
இப்போது அவர் உயர்கல்வி அமைச்சராகி இருக்கிறார் அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். பட்டியலினத்தவருக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி, பாராட்டாமல் இருக்க முடியுமா.? என்று குறிப்பிட்டுள்ளார்.
நானும் திரு.கோவி. செழியன் அவர்களும்
ஒரே நாளில்
‘முனைவர்’ பட்டம் பெற்றோம்.
எளியவன் நான் பள்ளிக்கல்வி அமைச்சராகப் பணியாற்றினேன்.
இப்போது அவர் உயர்கல்வி அமைச்சராகி இருக்கிறார்
எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..!
பட்டியலினத்தவருக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி
பாராட்டாமல் இருக்க முடியுமா..?— எஸ்.எஸ்.வைகைச்செல்வன் (@vaigaichelvan) September 30, 2024
திமுக அமைச்சர் ஒருவரை அதிமுக முன்னாள் அமைச்சர் பாராட்டியது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.