பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.! இபிஎஸ்க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்.!
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் வெளியானது தொடர்பாக இபிஎஸ்க்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டை உலுக்கிய பாலியல் சம்பவம் என்றால் அது தான் பொள்ளாச்சி பாலியல் சம்பவம். பல பெண்கள், கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்கள் கேட்போரை அதிர வைத்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளும் சம்பந்தப்பட்டு இருந்தனர்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் : இந்த பாலியல் வழக்கின் கீழ் 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெண்கள் பாலியல் வழக்கு என்பதால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் வெளியில் தெரிய கூடாது என்பது விதி. ஆனால், இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் வெளியில் தெரிந்துவிட்டது.
இபிஎஸ்-க்கு எதிராக வழக்கு : இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநல வழக்கு தொடரபட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
மதுரை உயர்நீதிமன்றம் : அப்போது இது தொடர்பான வழக்கு ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று, உத்தரவு வழங்கப்பட்டு இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து, மதுரை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக ஏற்கனவே உத்தரவிட்டு விட்டதால் அங்கு தான் இந்த பொதுநல வழக்கை மேல்முறையீட்டு வழக்காக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
50 ஆயிரம் ரூபாய் அபராதம் : மேலும், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதை கவனிக்காமல் இங்கு வழக்கு தொடர்பட்டதால், மனு தாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.