அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம்.! தலைமறைவான முக்கிய நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு.!
அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாகி உள்ள முக்கிய நிர்வாகி ஹரிஷுக்கு ஜாமீன் மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த மாதம் 26ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு தனியார் அமைப்பு ஒரு விழா ஒன்றை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. இதில் நடிகர் வடிவேலு, தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கும் யூ-டியூப் பிரபலன்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
போலி டாக்டர் பட்டம் : பிறகு தான் இந்த டாக்டர் பட்டம் போலியானது என தெரியவரவே, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளித்தார். அதில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் கையெழுத்திட்டதாக போலி கடிதம் கொடுத்து எங்களிடம் அந்த தனியார் அமைப்பு வளாக அனுமதி வாங்கிவிட்டனர் எனவும்,
சிறப்பு விருந்தினர் : அதே போல அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை குறிப்பிட்டு, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர் எனவும் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளித்துள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
தலைமறைவு : இந்த போலி டாக்டர் பட்டம் தொடர்பாக கோட்டூர்புர காவல்நிலையத்தில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபட்டது. மேலும், இந்த புகாரை அடுத்து தலைமறைவாகி உள்ள விழா ஏற்பாட்டாளர் ஹரிஷ் என்பவரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
முன்ஜாமீன் : தலைமறைவாகி உள்ள ஹரிஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அந்த முன்ஜாமீன் மனுவில் அண்ணா பல்கலை கழகத்திற்கும், சிறப்பு விருந்தினருக்கும் கவலையில்லை என கூறப்பட்டது.
இந்த முன்ஜமீனுக்கு கோட்டூர்புர காவல்துறையினர் மறுப்பு தெரிவிக்கவே தலைமறைவாகி உள்ள ஹரிஷ்க்கு முன்ஜாமீன் தர மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.