சிங்கம் சிங்கிளாதான் வரும்! மேஜிக் சிம்பல் எங்களிடம் உள்ளது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
எங்கள் தலைமையில் சில கட்சிகளுடன் இணைந்து மக்களை சந்திக்க உள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், கூட்டணியிலிருந்து பாஜக விலகியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாஜக தனித்து போட்டியிடும் என்றும் உள்ளட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்ற முடியாத நிலையில் இருந்தது. எங்களை பொறுத்தவரை கட்சி நலன் பாதிக்காத வகையில் மட்டுமே முடிவெடுக்க முடியும், தற்போது கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது அவர்களின் முடிவு எனவே இதுகுறித்து பதில் அளிக்க விரும்பவில்லை.
எதிர்வரும் காலத்தில், அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதேபோல் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, அவர்களுடைய விருப்பத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் பாஜக எங்கள் கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா? என்பதை கட்சிதான் முடிவு செய்யும். பாஜக முடிவால் அதிமுக-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக எங்கள் கூட்டணயில் இருந்தது. சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டணியில் இருந்தது.
இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லை. எங்கள் தலைமையில் சில கட்சிகளுடன் இணைந்து மக்களை சந்திக்க உள்ளோம். வெற்றிச் சின்னம் மேஜிக் சிம்பல் இரட்டை இலை எங்களிடம் உள்ளது. 2016-ம் ஆண்டு தனியாக நின்று அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. அம்மா ஆட்சியின் சாதனையை மக்கள் நினைத்து பார்த்திருக்கிறார்கள். எனவே நாங்கள் மகத்தான வெற்றியை பெறுவோம். சிங்கம் சிங்கிளாதான் வரும். அதிமுக சிங்கங்களாகவே மாபெரும் வெற்றிபெறும் என்று கூறினார்.