கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல – ஈபிஎஸ் கடிதம்

Default Image

அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என ஈபிஎஸ் கடிதம். 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஓபிஎஸ் அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எதுவாக படிவம் A மற்றும் படிவம் B ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தை ஈபிஎஸ் ஏற்க மறுத்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது ஓபிஎஸ்-க்கு, எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தங்களின் 29.06.2022-ம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகள் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், மகாலிங்கம் வழியாகப் பெறப்பட்டது.

கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கட்சிப் பொதுக்குழுவில் 1.12.2021 அன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கட்சி சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கட்சியின் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர்.

4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்த கடிதம் ஏற்புடையதாக இல்லை.

அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கட்சியின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்