மனுதாரருக்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்த முடியாது! 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் விளக்கம்!
மனுதாரருக்கு ஏற்றவாறு சட்டத்தைத் திருத்தினால், எல்லையில் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்களும் இதே போல் கோரிக்கையை முன் வைப்பார்கள்.
புதுச்சேரியில் அரசு பள்ளியில் படித்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தமிழகத்தில் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி ஏற்கனவே விசாரித்த நிலையில், புதுச்சேரியில் படித்த மாணவருக்கு அரசாணையை நீட்டித்து வழங்க உத்தரவிட முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மணிகண்டன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், மாநில எல்லையில் வசித்து எல்லைக்குட்பட்ட பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதால், மனுதாரருக்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்த முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவ்வாறு மனுதாரருக்கு ஏற்றவாறு சட்டத்தைத் திருத்தினால், எல்லையில் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்களும் இதே போல் கோரிக்கையை முன் வைப்பார்கள் என கூறி மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.