மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!
சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை : கிண்டி அரசு ஹாஸ்பிட்டலில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தது அரசு மருத்துவர்கள் சங்கம்.
அதாவது, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அங்குள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர் பாலாஜியை நலம் விசாரிப்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, முதல்வர் உதயநிதியின் காரை மறித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக் கோரியும் தர்ணாவில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் உதயநிதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள அரசு மருத்துவர்கள் சங்கத்தினருடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி , சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மருத்துவத் துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், ஊரக நலப்பணிகள் இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர், சென்னை மாநகர காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து மருத்துவர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தற்பொழுது, போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் கலைந்து சென்றனர்.