ரூ.2000 விவகாரம்..ரிசர்வ் வங்கி மாநில அரசுகளிடம் ஆலோசித்திருக்க வேண்டும்..! அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து..!
2000 ரூபாய் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி சம்மந்தபட்ட துறை சார்ந்தவர்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து.
நாட்டில் தற்போது பழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததோடு ரூ.2,000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மே மாதம் 23 முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் செப்.30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நிதித்துறை சார்ந்து முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொழுது ரிசர்வ் வங்கி சம்மந்தபட்ட துறை சார்ந்தவர்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்ககளை சந்தித்து பேசிய அவர், “இத்தகைய முடிவுகளை ஆர்பிஐ எடுக்கும் பொழுது சம்மந்தபட்டவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு” என்று கூறினார்.
மேலும், “இது போன்ற முடிவுகளை எடுக்கும் முன்பு மாநில அரசுகளிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும், 2016ல் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. அப்பொழுதும் திமுக அந்த நடவடிக்கையை எதிர்த்திருக்கிறது. எனவே, ஒரு முடிவு எடுக்கும் பொழுதும், வருங்காலத்தில் இது போன்ற முடிவு எடுக்க நேர்ந்தாலும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்தவர்களிடம் கலந்தாலோசிப்பது முறையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.