விவசாயியை எட்டி உதைத்த விவகாரம் – ஆய்வாளர், எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்..!
கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது தங்கபாண்டியனிடம் விவசாயி ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் விவசாயியை காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக இருந்த தங்கபாண்டியனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் அவர் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை இடைநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உள்ளது.
விவசாயி அம்மையப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊராட்சி செயலராருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், நீதிபதி தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை; எனவே முன்ஜாமின் வழங்கப்படுகிறது என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், விவசாயியை ஊராட்சி செயலாளர் எட்டி உதைத்த விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
‘முறையான தகவல் வழங்காத பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவி, தலையாரி முத்துலட்சுமி ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பி, 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.